வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப் படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 12,29,285 மொத்த வாக்காளர்களில் 81.49 சதவீதம், அதாவது 10,01,662 வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்திஅடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகையில் எதிர்வரும் 08.12.2022 வரை படிவங்களை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மைய அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று நாளது வரை ஆதார் எண்ணை இணைக்காமல் ஆருக்கும் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களுடைய ஆதார் விவரங்களை சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், பொதுமக்கள்மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/ Correction Enquiries என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், செல்போனில் Voters Help line App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும்விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு, கூடுதல் விவரங்கள் பெறலாம்.