வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் ஆய்வு நடத்தப்பட்டு, பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் அளித்த 14 திருத்தங்களை மட்டுமே ஏற்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் முன்வைத்த 44 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்த கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதியன்று, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
கடும் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதன் பிறகு வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பலதரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதே சமயம் வக்பு திருத்தச் சட்டத்தினை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.