கொரோனா வந்தாலும் வந்தது எல்லா ஐடி ஊழியர்களுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற வரப்பிரசாதம் கிடைத்தது. கடந்த ஓராண்டாக கொரோனா பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால், பல்வேறு ஐடி கம்பெனிகள் அந்த கம்பெனியின் ஊழியர்களை மீண்டும் ஆபீஸ்க்கு வர வைத்து விட்டார்கள். கொரோனா வைரஸ் மற்றும் அடுத்தடுத்த சமூக விலகல் விதிமுறைகள் வீட்டிலிருந்து வேலை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வந்ததால், பல வணிக நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து வேலையை மிகவும் தீவிரமாகப் பின்பற்றத் தொடங்கின. வீட்டிலிருந்து வேலை செய்வதை முன்னெப்போதையும் விட வசதியாக மாற்ற, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அதிநவீன வீடியோ கான்பரன்சிங் கருவிகளை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் சரியாகிவிட்டதால், ஒர்க் ஃப்ரம் ஹோம் கொடுத்த பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரியச் சொல்லிவிட்டன. அந்தவகையில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும், அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே ஊழியர்கள் இருந்தால், அவர்கள் மே மாதம் முதல் அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.