இருமுறை பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் முதல் பொது தேர்விலேயே நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள், 2வது முறை தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்களித்துள்ளார்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சகம் புதியபாடத்திட்ட முறையை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட இந்த முறைப்படி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் பொது தேர்வுகளில், அவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த தேர்வினை இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளலாம். இந்த முறை பொதுத்தேர்வு மீது இருக்கும் மாணவர்களின் பயத்தை போக்க பெரிய அளவில் உதவும் என மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம் அளித்தது.
பொதுத்தேர்வில் மாணவர் குறைந்த மதிப்பெண் எடுக்கும்போது 2 வது முறையில் இதைவிட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும்.இந்த முறைக்கு மாணவர்கள் மத்தியிலும் வரவேற்பு இருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் “ஆண்டுக்கு இரண்டு முறை 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த முறை குறித்து தொடர்ச்சியாக பல மாணவ மாணவிகளை சந்தித்து பேசி வருகிறேன். அனைவரும் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர். 2024 ம் ஆண்டிலிருந்து இந்த புதிய கல்வித் திட்டம் அமலாகும் என்று அவர் கூறினார். ஆனால் மாணவர்கள் வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் பொது தேர்வில், முதல் பொது தேர்விலேயே நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள், 2வது முறை தேர்வு எழுத வேண்டிய தேவையில்லை. அதே நேரத்தில் 2வது முறை தேர்வு எழுதினால், இன்னும் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என நினைக்கின்ற மாணவர்கள் மட்டுமே 2வது முறை நடக்கும் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.