காஸாவிலிருந்து உடனடியாக 10 லட்சம் பேரை வெளியேற்றுவது இயலாத காரியம், கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் இருப்பதால் வெளியேற்றுவது சிரமம் என ஐ.நா. கருத்து தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கிலான மக்கள் வடக்கு மற்றும் மத்திய காஸா பகுதிகளில் இருந்து தெற்கு காஸா நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். மற்றவர்கள், எங்கு சென்றாலும் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது; அதற்குப் பதிலாக வீடுகளில் இருந்தவாறே இறந்து போகலாம் என இடம்பெயர மறுத்து வீதிகளில் கோஷம் எழுப்பி வருகின்றனர். ஒரு வாரமாகத் தொடர்ந்துவரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இருதரப்பிலும் பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாயிரத்தைத் தாண்டியுள்ளது. இதேபோல், 10வது நாளாக மருத்துவமனைகளில் படுகைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இந்தநிலையில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உணவு, தண்ணீர், தங்குமிடம் என எதுவும் இல்லாத இடத்திற்கு மாற்றுவது என்பது மிகவும் ஆபத்தானது… அது சாத்தியமில்லை என என ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்… காசா மக்களுக்காக 24 மணி நேரமும் தங்கள் ஊழியர்கள் உழைத்து வருவதாகத் தெரிவித்த அவர், உடனடியாக காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும், அப்போது தான் அனைவருக்கும் எரிபொருள், உணவு மற்றும் தண்ணீரை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.