விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கி, நடப்பு 2022-23 ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம் எனும் தலைப்பில்,பயிர் சாகுபடியுடன், கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக் கோழிகள், தீவனப்பயிர்கள், மரப்பயிர்கள், தேனீ வளர்ப்பு, மண் புழு உரத் தயாரிப்பு, ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் போன்ற வேளாண் தொடர்பான பணிகளையும் சேர்த்து மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்பிற்கு 50 ஆயிரம்ரூபாய் மானியம் வீதம், 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 3,700 ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகள் அமைப்பதற்கு 18 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியை தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், ஒப்புதல் அளித்து, அரசாணை தற்போது வேளாண்மை-உழவர் நலத்துறையினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பணிக்கும் எவ்வளவு மானியம்?
இத்திட்டத்தில், பயிர் சாகுபடியுடன் வேளாண் சார்ந்த அனைத்து வகையானபணிகளையும் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பண்ணையசெயல்விளக்கம் அமைப்பதற்கு, 50 சதவிகித மானியம் வழங்கப்படும். அதாவது, ஊடு பயிர் அல்லது வரப்புப்பயிர் சாகுபடிக்கு ரூ.5,000, கறவை மாடு அல்லது எருமை மாடு ஒன்று வாங்குவதற்கு ரூ.15,000, பத்து ஆடுகள் வாங்குவதற்கு ரூ.15,000, பத்து கோழிகள் வாங்குவதற்கு ரூ.3,000, இரண்டு தேனீப் பெட்டிகளுக்கு ரூ.3,200, 35 பழமரக் கன்றுகளுக்கு ரூ.2000, கால்நடைகளுக்கு தேவையானபசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதற்காக பத்து சென்ட் பரப்பில் தீவன பயிர்கள்சாகுபடி செய்வதற்கு ரூ.800, மண்புழு உரத்தொட்டி அமைப்பதற்கு ரூ.6,000, ஆக மொத்தம் ஒரு எக்டரில் ஒருங்கிணைந்த பண்ணையத் திடல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதல் மானியம்
சிறு, குறு விவசாயிகள் இனத்தில் ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகள்இத்திட்டத்தின் பலன்களை முழுமையாகப் பெறுவதற்கு, கூடுதலாக 20 சதவிகிதம்அதாவது ரூ.50,000 மானியத்துடன் கூடுதலாக ரூ.20,000/- மொத்தம் ரூபாய் 70,000 மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான தகுதிகளாக
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பரிந்துரைக்கப்படும் பால்மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரத்தயாரிப்பில் ஈடுபடாமல் பயிர் சாகுபடி மட்டும் மேற்கொள்ளும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனாளி ஆக முடியும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு எக்டர் வைத்திருக்க வேண்டும்.