உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க, அடுத்தகட்ட முயற்சியாக செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்திற்காக அமைப்படும் சுரங்கப்பாதை கடந்த 12ம் தேதி இடிந்து மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் கொண்டு 57 மீட்டருக்கு கிடைமட்டமாக துளையிடும் பணி நடந்தது. ஆனால், 47 மீட்டர் வரை துளையிட்ட நிலையில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் உடைந்து உள்ளே சிக்கிக் கொண்டன. இதனால் கடந்த 3 நாட்களாக மீட்புப்பணி நடக்கவில்லை. 14 நாட்களாக தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில், 15வது நாளான நேற்று சுரங்கத்தின் மேல்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டது. 86 மீட்டருக்கு செங்குத்தாக துளையிடும் பணி 4 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அதா ஹஸ்னைன் அளித்த பேட்டியில், ‘‘தொழிலாளர்களை மீட்க அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன. இதில் 2வது சிறந்த முயற்சியான செங்குத்தாக துளையிடும் பணி பிற்பகலில் தொடங்கியது. இதுவரை 19 மீட்டருக்கு துளையிடப்பட்டுள்ளது. மொத்த 6 வழிகளில் மீட்பு முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் சிறந்தது கிடைமட்டமாக துளையிடுவது என்பதால், ஆகர் இயந்திரத்தின் உடைந்த பாகங்களை வெளியில் எடுக்கும் பணி நடக்கிறது. மேக்னா மற்றும் பிளாஸ்மா கட்டர் கருவிகள் மூலம் இவை அகற்றப்பட்ட பிறகு, 15 மீட்டருக்கு கையால் தோண்டி துளையிடும் பணி நடைபெறும். இப்பணி முடிய நீண்ட நாள் ஆகலாம். எனவே எந்த கால இலக்கையும் கூற முடியாது’’ என்றார்.
சுரங்கப்பாதை இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் உடைந்த பாகங்களை வெட்டி அகற்ற ஐராபாத்தில் இருந்து பிளாஸ்மா கட்டர் கருவி நேற்று கொண்டு வரப்பட்டது. மேலும் மீட்பு பணியில் ராணுவமும் நேற்று ஈடுபடுத்தப்பட்டது. ராணுவத்தின் பொறியாளர் குழுவான மெட்ராஸ் சாப்பர்ஸின் ஒரு பிரிவினர் சுரங்கப் பகுதிக்கு நேற்று வந்தனர். இதற்கிடையே, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உணவு, பழங்கள், மருந்துகள் தரப்படுவதால் அவர்கள் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கையால் துளையிட்டு தொழிலாளர்களை மீட்க நீண்ட நாள் ஆகும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் சையத் அதா ஹஸ்னைன் கூறியிருக்கும் நிலையில், மீட்பு பணியில் உதவி வரும் சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்டு டிக்ஸ் அளித்த பேட்டியில், ‘‘தொழிலாளர்கள் நிச்சயம் வீடு திரும்புவார்கள். வரும் கிறிஸ்துமசுக்குள் அவர்கள் மீட்கப்படுவார்கள்’’ என கூறி உள்ளார். இதனால் தொழிலாளர்களை மீட்க இன்னும் ஒரு மாதம் கூட ஆகலாம் என கூறப்படுகிறது.