காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டெல்டா பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. மேலும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.. நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.. அப்போது “ பாதுகாக்கப்பட்ட வேளாண் நிலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை அந்த கடிதத்தில் கூறியிருந்தார்..
இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து பேசினார்.. “இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன். செய்தியைப் பார்த்த உடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் நகலை அமைச்சரிடம் அளிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரிடம் கூறி இருக்கிறேன். முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன் தான். உங்களைப் போன்று நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இது போன்ற திட்டத்திற்கு அனுமதி அளிக்காது.” என்று தெரிவித்தார்…
இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார்.. அப்போது பேசிய அவர் ” டெல்டா பகுதியில் புதிதாக மூன்று சுரங்கங்கள் தோண்ட திட்டமிட்டு இருப்பது விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏற்கனவே திமுக ஆட்சியில் தான் மீத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் அதுதான் காரணம்.
தற்போது இந்த விவகாரத்திலும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. இது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே சட்டமன்றத்தில் மட்டும் பேசினால் போதாது. பாராளுமன்றத்திலும் பேசி இதை ரத்து செய்ய முழு மூச்சோடு தி.மு.க. எம்பிக்கள் கடமையாற்ற வேண்டும்..” என்று கூறினார்.
இதை தொடர்ந்து அவரிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் டெல்டா காரன் இதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “மீத்தேன் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதும் இதே டெல்டாக்காரர் தான்” என விமர்சித்தார்.