அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட இருக்கும் நிலையில், அப்போது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருக்கிறது.
திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து, மகளிர் ஒருவர் துணைப் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு மகளிர் ஒருவருக்கு வழங்கப்படும். இந்நிலையில், அந்த இடத்திற்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமுமே எழுந்துள்ளது.
இந்நிலையில், நடக்கவிருக்கும் தேர்வு குறித்து திமுகவின் மகளிரணி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தமிழக அரசியலில் பெண்கள் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்குக் கடுமையாகப் போராட வேண்டும். அதுவும் ஒரு பெண் தலைமை பொறுப்புக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. அப்படி இருக்கையில், தன்னை கடுமையான கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் கனிமொழிக்கு, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக் கொடுத்தால் சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும், இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ ஒருவர் கூறுகையில், ”கலைஞர் இருந்த வரை கழகத்தை அரண்போல காத்து நின்றார். அந்த வரிசையில் வரும் ஒருவரான கனிமொழிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கலாம். அவரது பல செயல்பாடுகள் முக்கியமானதாகத் தோன்றுகிறது” என்றார்.
அதேபோல், அண்ணா அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி கூறுகையில், ”இன்று கனிமொழி முக்கியமானவர். கடந்த தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் அப்பொறுப்பிற்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார். இதுகுறித்து அரசியல் விமர்சகர் கூறுகையில், ”ஜெயலலிதாவுக்கு பிறகு பெண் தலைமை உருவாவது கடினம் என எண்ணி வந்தேன். தற்போது கனிமொழியைப் பார்க்கையில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவுக்கு மேலும் வலு சேர்க்கும்” என்று தெரிவித்தார்.
இப்படியாகக் கட்சியினர் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கருத்துகள் இருக்கிறது. எது எப்படியோ, அக்டோபர் 9ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூடுகிறது. அப்போது, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதுகுறித்து தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. அப்படி, கனிமொழி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அது திமுகவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல வழிகளில் நன்மைத் தரக்கூடியதாக இருக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.