தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2016 ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறதாக புகார்கள் எழுந்த நிலையில், தேர்வுகளில் பதில் எழுதாத வெற்று OMR தாள்களைச் சமர்ப்பித்தவர்கள் பலருக்கும் போலி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், 24,640 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், 25,753 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது பெரு சர்ச்சையானது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், 25,000 ஆசிரியர்களின் பணிநியமனத்தை ரத்து செய்து கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், புதிய தேர்வு முறையை 3 மாதங்களில் நடத்தி முடிக்க உத்தரவிட்டது. மேலும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இத்தனை காலம் வாங்கிய சம்பளத்தைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “எனக்கு நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், ஆனால், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் தெரிவித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏராளமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் யாரும் வேலையிழக்க மாட்டார்கள் என்றும் தான் உயிருடன் இருக்கும் வரை அது நடக்காது என்றும் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.