H1B visa: அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்வதானாலும் சரி, படிப்பதற்காக மாணவராக சென்றாலும், அதில் அதிகளவில் இந்தியர்களே இருப்பர். அந்தளவுக்கு பாரம்பரியமாக இந்தியர்களுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு சுமூக உறவு உண்டு. குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பலருக்கும் அமெரிக்கா என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். இந்தநிலையில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இது உலக நாடுகளிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சட்டவிரோத குடியுரிமை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவைகளில் அதிரடி காட்டி வருகிறார் டிரம்ப். அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்த டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 100க்கும் மேற்பட்ட சட்டவிரோத இந்திய குடியேறிகள் தாயகம் திரும்பினர்.
இந்தநிலையில், 2026 நிதியாண்டுக்கான H-1B விசா பெறுவதற்கான பதிவு காலம் இந்திய நேரப்படி மார்ச் 7, 2025 அன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கி மார்ச் 24, 2025 அன்று இரவு 10:30 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக USCIS அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இந்த காலகட்டத்தில், அனைத்து தரப்பினரும் ஹெச்1பி விசா பெறுவதற்கான தங்களுடைய ரிஜிஸ்ட்ரேஷனை USCIS தளத்தின் மூலம் மின்னணு முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஹெச்1பி விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் USCIS ஆன்லைன் கணக்கை பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். USCIS இல் இதுவரை ஆன்லைன் கணக்கு இல்லாத நிறுவனங்கள் முதலில் ஒரு நிறுவன கணக்கை உருவாக்க வேண்டும். இந்த கணக்கின் மூலம் அவர்கள் தங்கள் H-1B ரிஜிஸ்ட்ரேஷன் நிர்வகிக்க முடியும்.
இந்த குறிப்பிட்ட காலத்தில் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 215 டாலர் கட்டணத்தை செலுத்த வேண்டும். H-1B விசாக்களை பெறுவோரை லாட்டரி முறையில் தேர்ந்தெடுக்கும் செயல்முறை இந்த பதிவு காலம் முடிந்த பிறகு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அதிக ஹெச்1பி விசா பெறுவதில் அமெரிக்க நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் பங்கீட்டை கொண்டு உள்ளது. இதேபோல் மொத்த ஹெச்1பி விசா கேப்-ல் அதிகம் விசா பெறும் நாட்டினர் பட்டியலில் இந்தியர்கள் தொடர்ந்து டாப் 3 இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.