திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (26). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வங்கி பணிக்கான தேர்வு எழுதுவதற்காக ஆம்பூரில் தனியார் பயிற்சி மையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் மின்னூரைச் சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பயிற்சி வகுப்பின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவரும் ஆம்பூரில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் மின்னூர் பகுதியில் இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வந்தனர்.
இந்நிலையில், காதல்… கல்யாணத்தில் முடிந்ததும் பொருளாதாரம் இருவரின் முகத்திலும் அறைய துவங்கியுள்ளது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு முற்றியதில், வாழ்வை வெறுத்த அனுப்பிரியா, மன அழுத்தத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார், அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவல் அறிந்து வந்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தின் முன்பு குவிந்தனர்.
அனுப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணமாகி ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், புதுப்பெண் மரணமடைந்ததால், அனுப்பிரியாவின் இறப்புக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கணவன் திருமுருகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.