கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் கிள்ளியூரை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தற்போது மேல்படிப்புக்கு செல்ல தயாராக இருந்தார். இந்நிலையில், அந்த மாணவிக்கு கடந்த வாரம் 18 வயது நிறைவடைந்து 19 வயதாகியுள்ளது. அந்த பிறந்த நாளை தனது பள்ளி தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். பிறகு ஒரு வாரம் கழித்து தனது தோழி ஒருவரை சந்திக்க செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும், அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. இறுதியில் மாணவியின் தோழியிடம் விசாரித்த போது, மாணவி படித்த அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியர் ஒருவர் மாணவியின் வகுப்புக்கு ஆங்கிலப்பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியருக்கும், மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. மாணவிக்கு 18 வயது பூர்த்தியடையாததால், அவர்களது காதலை ரகசியமாக வளர்த்து வந்தனர். இந்நிலையில், மாணவிக்கு 18 வயது முடிந்ததும் அவர் கடந்த 19ஆம் தேதியன்று, ஆசிரியருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளை ஆசிரியர் கடத்திச் சென்று விட்டதாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தலைமறைவான ஆசிரியர் மற்றும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ஆசிரியருடன் மாணவி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் மாணவியின் பெற்றோரை போலீசார் வரவழைத்தனர். அப்போது மாணவி, ஆசிரியருடன் இருப்பதை பார்த்து கதறி அழுதனர். எங்களுடன் வந்திடும்மா… இன்னும் படிக்க வேண்டியது இருக்கிறது… இந்த வயதில் திருமணம் வேண்டாம்மா..? என்று உருக்கமாக பேசி மகளின் மனதை மாற்ற முயன்றனர். ஆனால், பெற்றோரின் எந்தவொரு பேச்சுக்கும் மாணவி செவிசாய்க்கவில்லை.
தனது காதலனான ஆசிரியருடன் செல்வதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, ஆசிரியரின் பெற்றோரும் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது போலீசாா் முன்னிலையில், மாணவியின் பெற்றோரும், ஆசிரியரின் பெற்றோரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆசிரியரின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், தங்களது மகளை ஆசிரியருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினர். இதுதொடர்பாக இருவீட்டாரும் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி கொடுத்தனர். திருமணம் நடக்கும் வரை மகள் எங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு மாணவியும், ஆசிரியரும் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவி தனது பெற்றோருடன் சென்றார். 18 வயது முடிவடைந்த ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவி, ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை கிளப்பியது.