தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவதை போலவே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், ஆனால், கடும் நெருக்கடி, கடன் சுமை மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருக்கிறது.
எனவேதான், மத்திய மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 3 சதவீதம் உயர்த்தி இப்போதுள்ள 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட்டு விடும் என்கிறார்கள். அதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, 4 சதவீதம் வரைக்கும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்கிறார்கள். அப்படி 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால், தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 25,500 என்றால், ஊழியர்களுக்கு 10,610 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.