பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாகத் தெரிவித்தனர்.
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடக்கும் போராட்டத்தில் 300க்கும் அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அரசு மௌனம் காத்தால் வருகிற 30-ஆம் தேதி அடுத்தகட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.