சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ”ஜெயிலர்” திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே, ரஜினி நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் நெட்டிசன்களின் கேளிக்கைக்கு உண்டானது. இதனால் ஜெயிலர் படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு காட்சிகளை அறிமுகப்படுத்தியதே ரஜினிகாந்தின் படங்கள் தான். ஆனால், தற்போது அவரது படத்திற்கே சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக முன்னணி நடிகர்களின் எந்தப் படத்திற்குமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை.
பொங்கலுக்கு அஜித்தின் “துணிவு” மற்றும் விஜய்யின் “வாரிசு” ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் அனுமதியின்றி நள்ளிரவு, அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. இதனால் வெடித்த பிரச்சனையால், சமீப காலமாகவே எந்தப் படங்களுக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்த விவகாரத்தை காரணம் காட்டி தற்போது ஜெயிலர் படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.