Wildfire: ஜப்பானில் காட்டுத்தீ ஏற்பட்டு படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற காட்டுத்தீ சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. காட்டுத் தீ பரவல் என்பது மிகவும் வேகமாக பரவி பெரும் அளவில் சேதத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் ஆகும். சமீபத்தில் காலிஃபோர்னியா காட்டுத்தீ பற்றிதான் உலகமே பேசியது. ஒரு ஊரையே காவு வாங்கியது. பணக்காரர்கள், சாதாரண மனிதர்கள் வரை அனைவரின் வீடுகளும் தீக்கிரையாகியது.
அந்தவகையில் தற்போது ஜப்பானில் பெரிய அளவிலான காட்டுத் தீ ஏற்பட்டிருக்கிறது. பிப்ரவரி 26ஆம் தேதி மூண்ட தீ, ஓஃபுனாட்டோ காட்டுப் பகுதியில் 1,200 ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்புக்குப் பரவியுள்ளதாக தீயணைப்பு, பேரிடர் நிர்வாக அமைப்பு கூறுகிறது. பாதிப்படைந்த நிலபரப்பு, இன்னும் தெளிவாகவே தெரியவில்லை என்றும், 1992ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பிறகு ஆக மோசமான தீ இது என்றும் அமைப்பின் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார். கடந்த 1992ம் ஆண்டு காட்டுத்தீயால் 1,030 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் பாதிக்கப்பட்டது.
தற்போது காட்டுத்தீயில் இன்றுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இவரின் உடலை கடந்த 27ம் தேதி கருகிய நிலையில் போலீஸார் கண்டெடுத்துள்ளனர். தீயினால் 80க்கு மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதுமிருந்து ஏறக்குறைய 1,700க்கு மேற்பட்ட தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். இன்றுவரை காட்டுத்தீ குறைந்தப்பாடு இல்லை.