நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் கடந்த 2019ஆம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியது. ஜெட் ஏர்வேஸ் திவாலானதை அடுத்து 2021இல் நிறுவனத்தை மீட்டெடுக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்படி, ஜலான் கல்ராக் கூட்டு நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கியது. இதற்காக முதல் தவணையாக ரூ.350 கோடி செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால், அந்த நிறுவனம் ரூ.200 கோடியை மட்டும் செலுத்தியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்பிஐ, கனரா வங்கிகள் நிபந்தனைகளை பின்பற்றத் தவறியதாக ஜலான் கல்ராக் நிறுவனம் மீது குற்றம்சாட்டியது. இந்நிலையில், ஜெட்ஏர்வேஸ் தொடர்பான வழக்கில், விசாரணை அனைத்தும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக தீர்வு காண முடியாததால் திட்டம் தோல்வியடைந்து விட்டது. தற்போதைய மோசமான நிதிச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிறுவனத்தால் வாங்கப்பட்ட கடன்களை அடைக்க ஒருவரை நியமிக்கவும் கடன்களை திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கவும் தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டுள்ளது.