தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் கார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். மாரிமுத்துவின் உறவினரான மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளராக கொசு மருந்து தெளிக்கும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து விளாத்திகுளம் மதுரை ரோட்டில் அமைந்துள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான “ராஜலட்சுமி ஜூவல்லர்ஸ்” என்ற நகைக்கடையில் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி கடை ஷட்டரை உடைத்து கடையில் 13 சவரன் தங்க நகை, 25 கிலோ மதிப்புள்ள வெள்ளி கொலுசு, வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12,500 ரொக்க பணம் என மொத்தமாக சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளனர்.
இதையடுத்து, வாட்ச்மேன் ஒருவர் அளித்த தகவலின்படி, அவர்கள் இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்து திருடிச் சென்ற நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், இருவரும் திருடுவதற்கு தயாராகி தேவையான பொருட்களை நகைக்கடையின் மாடியில் வைத்துள்ளனர். தொடர்ந்து மறுநாள் நகைக்கடையின் மாடிக்கு சென்றுள்ளனர். பின்னர், கடை பூட்டிய பிறகு நள்ளிரவில் கீழே இறங்கி யூடியூப் பார்த்து கட்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு ஷட்டரை உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த பொருட்களை திருடிவிட்டு, வடிவேலு பட பாணியில் மோப்பநாயிடம் சிக்கி விடக்கூடாது என திருடிய இடம் முதல் கடை வாசல் வரை மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இப்படி பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வந்த இவர்கள், மாடியில் இருந்து கீழே குதிக்கும் போது கால் இடறி கீழே விழுந்து வாட்ச்மேன் கண்ணில் சிக்கியுள்ளனர்.
உடனே வாட்ஸ் மேன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது தான் இருவரும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். மேலும், அவர்களை சோதனை செய்ததில் இருவரிடமும் போலி கட்சி விசிட்டிங் கார்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவருமே தங்களை ஒரு கட்சி நிர்வாகிகள் என கூறி கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இவர்கள், இந்த கடைக்கு அருகில் உள்ள கடையில் கொள்ளையடிக்க முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.