தொலைதூர காதலர்கள் உண்மையான முத்தத்தை பரிமாறிக்கொள்வதற்காக Remote kissing device என்ற புதிய சாதனத்தை சீனாவின் சான்சோவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர் ஜியாங் சோங்லி கண்டுபிடித்துள்ளார்.
இந்த சாதனம் தற்போது சீனாவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, இந்த சாதனத்தை செல்போனில் பொருத்தி, இதில் உள்ள சிலிகான் உதடுகளில் முத்தமிட்டால் பிரஷர் சென்சார் ஆக்சுவேட்டர் மூலம் உண்மையான முத்தத்தை உணர முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது சிலிக்கானை வைத்து மனிதனின் உதடுகளை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘சிலிக்கான் லிப்ஸ்’ உடன் கான்ட்ராப்ஷனில் பிரஷர் சென்சார்கள் மற்றும் ஆக்சுவேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சாதனம் பயனரின் உதடுகளின் அழுத்தம், இயக்கம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இந்த சாதனம் மனிதர்கள் நேரில் பரிமாறும் உண்மையான முத்தத்தைப் பிரதிபலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை 288 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ₹ 3,433 ஆகும் .
மேலும், இந்த ரிமோட் கிஸ்ஸிங் சாதனத்தை பயன்படுத்த பயனர்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கி, சாதனத்தை மொபைலின் சார்ஜிங் போர்ட்டில் இணைக்க வேண்டும். ஆப் மூலம் தனது காதலருடன் இணையத்தில் இணைந்தபிறகு , அவர்கள் ஒரு வீடியோ அழைப்பைத் தொடங்கலாம் . அதன் பின்னர் அதே ஆப் மூலம் அவர்களின் முத்தங்களின் பிரதிகளை ஒருவருக்கொருவர் அனுப்பலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சாதனத்தை கண்டுபிடித்த ஆய்வாளர் ஜியாங் சோங்லி கூறுகையில், தனது காதலியுடன் நீண்ட தூர உறவில் இருப்பதாகவும், தொலைபேசி மூலம் மட்டுமே தொடர்பில் இருக்க முடியும் என்பதால் இந்த புதிய வகை சாதனத்தை உருவாக்குவற்கான உத்வேகம் தனக்கு வந்தது என்று கூறினார்.