தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமானது மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் மத்திய மாநில அரசின் வாயிலாக கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக மாநில அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை நீங்கலாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் தீன் தயாள் உபாத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு நிலையான மாத வருமானம் ஈட்டும் வகையில் திறன்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் சுகாதார பராமரிப்பு, ஆயத்த ஆடை வடிவமைப்பு, கட்டுமானத் துறை, ஆட்டோ மோட்டிவ், சில்லரை வணிகம், தளவாடங்கள், கட்டுமானத் துறை, அழகுக் கலை, தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெற இயலும் 120-க்கு மேற்பட்ட தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மொத்த பயிற்சி ஒதுக்கீட்டில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள பிரிவினரான பட்டியலினத்தினருக்கு – 62 சதவீதம், மலைவாழ் பழங்குடியினருக்கு 3 சதவீதம் மற்றும் சிறுபான்மையினருக்கு 16 சதவீதம் என சிறப்பு ஒதுக்கீடு அளித்து இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மகளிர் திட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் அலுவலகத்தையோ அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அணுகி விவரங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து பயன் அடையலாம். மேலும், ஒவ்வொரு வட்டாரத்திலும் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் பங்கேற்றும் விருப்பமான பயிற்சியை தேர்வு செய்து பயன்பெறலாம். இதற்காக தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டுள்ள வாழ்வாதார உதவி அழைப்பு எண் (155 330) எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் விவரங்களை கேட்டறியலாம்.