மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வாணையம் பல்வேறு துறைகளில் அலுவலகப் பணியாளர் மற்றும் சார்ஜன்ட் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி மொத்தம் 12,523 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது ஸ்டாஃப் செலக்சன் கமிட்டி. இந்த அறிவிப்பின்படி அலுவலகப் பணிகளில் 11,994 காலியிடங்களும் சார்ஜென்ட் பணிகளுக்கு 529 காலியிடங்களும்நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிகளில் சேர்வதற்கான கல்வித் தகுதியாக மெட்ரிகுலேஷன் கல்வி முறையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அலுவலகப் பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்களின் வயதுவரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். சார்ஜன்ட் பணிகளுக்கான வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என ஸ்டாப் செலக்சன் கமிட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் ஐந்தாண்டுகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கான பிறகு விவரங்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 17.02.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து பிப்ரவரி மாதம் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பணிகளுக்கு ஊதியமாக 5,200,முதல் 20,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டிற்கு 1,800 ரூபாய் தர ஊதியம் வழங்கப்படும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவு கட்டணம் 100 ரூபாய். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் மேலும் மத்திய அரசால் சலுகை வழங்கப்பட்டவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த வேலைக்காக விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கணினி திறனாய்வு தேர்வுகள் மற்றும் உடல் தகுதி தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனைப் பற்றி மேலும் தகவல்களைப் பெற மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.