ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இருந்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். டெல்லியில் தமிழக கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது, ஜான் பாண்டியன் உடனிருந்தார். இதற்கிடையே, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால், கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
இருப்பினும், பாஜக உடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இணைவது என்பது பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்காத அக்கட்சி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்டு கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தியது. வாக்கெடுப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மருத்துவராக பணியாற்றி வரும் அவர், அண்மைக்காலமாகவே அரசியல் நிகழ்வுகள், கட்சிக் கூட்டங்களில் தனது தந்தையுடன் வருகை தருகிறார். தனது தந்தையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் முடிவு செய்து வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதா தான் தனக்கு அரசியலில் ரோல் மாடல் என்றும் நிவேதா தெரிவித்துள்ளார். எனவே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், ஜான் பாண்டியனோ பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியையாவது கேட்டு பெற்று விட வேண்டும் என முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. ஆனால், வெற்றி வாய்ப்பு கருதி அதிமுகவுடன் கூட்டணி வைப்பது பற்றியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.