Jos Buttler: இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் நேற்று முன் தினம் (பிப்ரவரி 26) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளதாவது: “இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போகிறேன். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை எனக்கும் அணிக்குமான சரியான முடிவாக இருக்கும். வேறு யாராவது கேப்டன் பொறுப்பினை ஏற்று மெக்கல்லமுடன் இணைந்து செயல்படுவார்கள். சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் எனது கேப்டன் பொறுப்புக்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால், முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. அதனால், கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என உணர்ந்தேன்” என்றார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் அணியை வழிநடத்தும்போது துணைக்கேப்டனாக செயல்பட்ட ஜோஸ் பட்லர், ஜுன் 2022 முதல் ஒயிட் பால் கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பிறகு 2022 டி20 உலகக்கோப்பையில் பட்லர் தலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அரையிறுதியில் இந்தியாவையும், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி டி20 கோப்பையை தட்டிச்சென்றது. அதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக ஐசிசி கோப்பை வென்ற மூன்றாவது கேப்டனாக மாறினார் ஜோஸ் பட்லர்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதான இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என தோற்ற இங்கிலாந்து அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில் கூட வெல்லமுடியாமல் தோல்வியை சந்தித்துள்ளது. உண்மையில் கேப்டனாக சில தவறான முடிவுகளை ஜோஸ் பட்லர் எடுத்திருந்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஜோஸ் பட்லர் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பில், “இந்த முடிவு எனக்கும், அணிக்கும் சரியான முடிவாக இருக்கும் என நம்புகிறேன். வேறு யாராவது வந்து, மெக்கல்லம் உடன் நெருக்கமாகப் பணிபுரிந்து, அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் இரண்டு தோல்விகளுடன் முன்னேற முடியாமல் போனது என கேப்டன்சியின் முடிவு என்றே கருதுகிறேன். இதை அவமானமாக உணர்கிறேன், அதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 45 ஒருநாள் போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகள் என மொத்தம் 96 போட்டிகளுக்கு பட்லர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். நாளை நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி போட்டியில் கேப்டனாக செயல்படவுள்ளார்.