சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், ஜூன் 23-ம் தேதியே பொதுக்குழு முடிந்துவிட்ட நிலையில் தற்போது ஏன் முறையீடு செய்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு, தங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாகவும், அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரக் கூடாது என்று உத்தரவிடுமாறு இபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது..
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இபிஎஸ் தரப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.. மேலும் உங்களுக்குள் நட்போ, பிணக்கோ அதை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்..
ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.. மேலும் இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற ஒருநபர் அமர்வு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினர்.. மேலும் இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்துவதற்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.. மேல் முறையீட்டு வழக்கில் இரு தரப்பும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்..