தெலுங்கானாவில் பெற்றோர் பேச்சைக் கேட்டு காதலை முறித்துக் கொண்ட காதலியை ஒரே ஒரு முறை சந்திக்கலாம் என்று கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையை சேர்ந்த சாய்பிரியா என்ற கல்லூரி மாணவியும் ஸ்ரீசைலன் என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் தன்னுடைய காதல் குறித்து பெற்றோரிடம் சாய்பிரியா கூறியுள்ளார். ஆனால், அவர்கள் காதலை காதலை கைவிடும்படி அறிவுரை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காதலனுடன் பேசுவதை சாய்பிரியா தவிர்த்து வந்துள்ளார். மேலும், பெற்றோரும் ஸ்ரீசைலனை அழைத்து தங்கள் மகளுடன் இனி நீ பேசக்கூடாது என்று கண்டித்துள்ளனர். அப்போது சாய்பிரியாவை திருமணம் செய்து வைக்குமாறு ஸ்ரீசைலன் கெஞ்சியும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி சாய்பிரியாவை சந்தித்த ஸ்ரீசைலன், ’ஒரே ஒருமுறை தம்முடன் வெளியே வந்து மனம் விட்டு பேசிய பிறகு நிரந்தரமாக பிரிந்து விடலாம் என்றும் அதன்பிறகு உன்னை சந்திக்கவே மாட்டேன்’ என்று கூறியுள்ளான். இதனை நம்பி சாய்பிரியாவும் ஸ்ரீசைலனுடன் பைக்கில் சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி உள்ளனர். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

இந்த நிலையில், மறுநாள் காலை சாய்பிரியாவின் செல்போனில் இருந்து அவரது தந்தைக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், அப்பா, நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஸ்ரீசைலன் உடனான காதலை கைவிட்டேன் என்றும், தற்போது மற்றொருவரை காதலிக்கிறேன் என்றும் இதற்கும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்கள் என்பதால் அவரை திருமணம் செய்ய ஹைதராபாத் செல்வதால் தேட வேண்டாம்’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் சாய்பிரியாவின் செல்போன் சிக்னலை தொடர்ந்து கண்காணித்தது மட்டுமின்றி ஸ்ரீசைலனை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது தன்னை கைவிட்ட சாய்பிரியாவை ஸ்ரீசைலன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கால்வாயில் புதைத்தது தெரியவந்தது.

தமது பேச்சை நம்பி வந்த சாய்பிரியாவை பைக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு அவரிடம் மீண்டும் தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதற்கு சாய்பிரியா மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த தாம் சாய்பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனை போலீசுக்கு தெரிவிப்பதாக சாய்பிரியா கூறியதால் அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் ஸ்ரீசைலன் வாக்குமூலம் அளித்துள்ளான். பின்னர் சாய்பிரியாவின் உடலை தமது உறவினர் சிவா உதவியுடன் அங்குள்ள கால்வாயில் புதைத்ததாகவும் கூறியுள்ளான். இந்த கொலையில் தமக்கு தொடர்பு இல்லை என்பதை நம்ப வைக்க, சாய்பிரியாவின் செல்போனில் இருந்து அவர் டைப் செய்தது போன்று தாமே அவரது தந்தைக்கு மெசேஜ் அனுப்பியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
இதையடுத்து கால்வாயில் புதைக்கப்பட்ட சாய்பிரியாவின் சடலத்தை போலீசார் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீசைலனையும், அவனுக்கு உதவி செய்த சிவாவையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.