”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் மெத்தனால் என்கிற கள்ளச்சாராயம் குடித்ததில் 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது விரும்பத்தகாத ஒரு செயல். யாரும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்த விவகாரத்தில், உடனடியாக சிபிசிஐடி விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஒருநபர் ஆணைய விசாரணைக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டார். யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்” என்றார்.
சிபிஐ விசாரணைக்கு மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”எதற்கு சிபிஐ விசாரணை. இதற்கு முன்னர் எத்தனையோ சம்பவங்கள் நடந்திருக்கிறது. திமுக அரசு சிபிசிஐடி விசாரணை, கமிஷன் உடனடியாக நிவாரணம் வழங்கியுள்ளது. இதில் எதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்..? சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அப்போது, அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத் திணறலில் இறந்தார், ஜெயராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினார்.
இதனால்தான், திமுக அன்றைக்கு சிபிஐ விசாரணை கோரியது. காவல் நிலையத்தில் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதை முதல்வராக இருந்த எடப்பாடி மறைக்கப் பார்த்ததால், நாங்கள் சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால், நாங்கள் இன்றைக்கு எதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக இருக்கிறோம். எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை” என்றார்.
Read More : பெற்றோர்களே..!! உங்கள் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! பணம் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..?