டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து கேன் வில்லியம்சன் விலக்கியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி குரூப் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. 2011ஆம் ஆண்டு முதல் கேன் வில்லியம்சன் தலைமையில் 10 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை 7 முறை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணியின் ஜாம்பவானாக உள்ள கேன் வில்லியம்சன், காயத்திற்கு பின் டி20 கிரிக்கெட்டின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணி, விளையாடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்த தோல்வி காரணமாக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் டி20 மற்றும் ஒரு நாள் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.
அந்நாட்டு ஒப்பந்தப்படி மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் மட்டுமே நியூசிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் கேம் வில்லியம்சன் 2024-25-ம் ஆண்டுக்கான நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து கேன் வில்லியம்சன் பேசுகையில், நியூசிலாந்து கிரிக்கெட்டை எதிர்காலத்தை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளேன். நியூசிலாந்து அணிக்காக தொடர்ந்து பங்களிக்கவும் தயாராகவுள்ளேன். நியூசிலாந்து சம்மரின் போது வெளிநாடுகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். அதனால் என்னால் நியூசிலாந்து அணியின் மத்திய ஒப்பந்தத்தை ஏற்க முடியாது.
நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் விலை மதிப்பில்லாதது. நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு திருப்பி கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை கடந்து வெளியில் எனது வாழ்க்கை மாறிவிட்டது. குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதும், அவர்களுடன் உடனிருப்பதும் முக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து கிரிக்கெட்டின் சிஇஓ ஸ்காட் வீனிக் பேசுகையில், கேன் வில்லியம்சனுக்காக எங்களின் விதிகளில் சில தளர்வுகளை கொண்டு வருவோம். அவரை நீண்ட நாட்கள் தேசிய அணிக்காக விளையாட வைப்பதற்கு இது உதவியாக இருக்கும். மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள வீரர்களை மட்டுமே தேர்வு செய்யும் நடைமுறை இருந்தாலும், எங்களின் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேனுக்காக தளர்வுகளை கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.