ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை கட்சி தலைமை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அக்கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் 150 நாள் பாதயாத்திரையை தொடங்குகிறார். இந்த யாத்திரையில் ராகுல் காந்தி உட்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோ மீட்டர் யாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.
யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உட்பட 9 பேர் 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். 20 பேர் 25லிருந்து 30 வயதுக்குள்ளும், 51 பேர் 31லிருந்து 40 வயதுக்குள்ளும், 38 பேர் 41லிருந்து 50 வயதுக்குள்ளும் உள்ளனர். மொத்தம் 3,570 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாத யாத்திரை வடக்கு நோக்கி நகர்ந்து திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விக்ரபாத், ஜல்கயோன், இந்தூர், ஆழ்வார், டெல்லி, அம்பாலா, பதான்கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரில் முடிவடைகிறது.
ராகுல் காந்தியின் இந்த தேசிய அளவிலான நடைபயணத்தை, கன்னியாகுமரியில் இன்று மாலை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேசியக் கொடி வழங்கி தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்து பாதயாத்திரை தொடங்குகிறது. நிகழ்ச்சி தொடக்க விழாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செய்த ராகுல் காந்தி அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார்.