சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்கள் பெறுவதற்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியப் பங்கு வகித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின், சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தனது தந்தையுமான மு.கருணாநிதி ஏற்றும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக மாற்றினார். இந்தப் புகைப்படத்தை முதலமைச்சர் சமூக வலைதளத்தில் புரொஃபைல் படமாக வைத்ததற்கு பின்னாலும் ஒரு கதை உண்டு.

சுதந்திர தினத்தை நாடு இன்று கொண்டாடும் வேளையில், 1974ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்கள் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் கருணாநிதி. நெஞ்சுக்கு நீதி என்ற தனது சுயசரிதை நூலில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநிலத் தலைமைச் செயலகத்தில் ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களுக்கு ஏன் இந்த உரிமையை வழங்கக் கூடாது என டெல்லிக்கு (மத்திய அரசுக்கு) கடிதம் எழுதியும், நேரில் பலமுறை கேள்வி எழுப்பியதாலும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் சுதந்திர தினத்தன்று முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள் என முடிவு செய்யப்பட்டது.