வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடைபெற்ற ஒரு சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து இருக்கின்றனர் மற்றொருவரை தேடி வருகின்றனர்.
சம்பவம் நடந்த தினமன்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உணவுப் பொருள்களை விநியோகம் செய்யும் ஊழியரான திருமலைவாசன் தனது பணியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த பார்த்திபன் என்பவருடைய இரு சக்கர வாகனத்துடன் எதிர்பாராத விதமாக மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு நபர் இருவரும் இணைந்து திருமலை வாசனை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த திருமலை வாசனை ரத்தம் சொட்ட சொட்ட அந்த நபர்கள் மீண்டும் மீண்டும் தாக்கினர். இதனைக் கண்ட பொதுமக்கள் காட்பாடி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாக வந்து தாக்குதலுக்கு உள்ளான திருமலை வாசனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் துறை தாக்குதல் நடத்தியுள்ள நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தப்பியோடிய நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக இணையதளத்தில் உலவும் வீடியோவை பார்த்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.