அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வேண்டுமென்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு விசாரிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுக ஒன்று சேர நான் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன். சசிகலா, தினகரனிடமும் பேசியுள்ளேன். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டுமென அமித்ஷா எவ்வளவோ கூறினார். ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால் இத்தனை பிரச்சனைகள் நடந்திருக்கிறது.
2026 ஒன்றிணைந்தால்தான் அதிமுகவுக்கு வாழ்வு.. இல்லையென்றால் தாழ்வு. தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என அமித் ஷா அப்போவே சொன்னார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. அன்று அவர் சம்மதித்திருந்தால், இன்றைக்கு அதிமுக தான் ஆளுங்கட்சியாக இருந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. நாங்கள் நினைத்தால் எந்தக் கட்சியிலும் பதவி வாங்கிக்கொண்டு சென்றுவிடலாம். ஆனால், நாங்கள் உருவாக்கப்பட்ட கட்சியில் இருக்கவே விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் இணைய வேண்டும் என்றால், 6 மாதங்களுக்கு அமைதியாக இருக்க வேண்டும். எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நாங்கள் பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம் என அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா கூறியுள்ளது, ஓபிஎஸ்-க்கு காட்டப்பட்ட பச்சைக்கொடி என சொல்லப்படுகிறது.