அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடுவார்.. நான் ஆம் ஆத்மி கட்சியின் சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று டெல்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
டெல்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் தங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியா கூட்டணியின் இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான வலுவான பிணைப்பின் அடையாளமாக, நடந்து வரும் மக்களவைத் தேர்தலில், டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு தாம் வாக்களிப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பார்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, மோடியிடம் விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் நான் விவாதத்திற்கு ரெடி. ஆனால் பிரதமர் மோடி விவாதத்திற்கு வர மாட்டார். பிரதமர் மோடி என் முன் வந்தால் பல கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து நான் கேள்வி எழுப்புவேன்.
பிரதமர் மோடியிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, அதானிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதுதான்? அடுத்ததாக தேர்தல் பத்திரங்கள் பற்றியும் மோடியிடம் கேட்க விரும்புகிறேன். இந்த 2 கேள்விகளிலேயே விவாதம் முடிவுக்கு வந்து விடும். அதேபோல, கொரோனா காலத்தில் மக்கள் அவதிப்படும்போது, தட்டுகளை தட்டுவதற்கும் மற்றும் மொபைல் போன்களில் டார்ச் அடிக்கவும் ஏன் சொன்னார் என்றும் பிரதமரிடம் கேட்க நினைக்கிறேன்.
22, 25 நபர்களுக்காக மட்டுமே மோடி வேலை செய்கிறார். டெல்லி சந்தினி சவுக்கில் உள்ள சிறிய தொழில் முனைவோர்களிடம் நான் கேட்கிறேன். மோடி உங்களுக்கு செய்தது என்ன? ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மற்றும் பிற வரிகள் சிறிய தொழில்களை பாதித்துள்ளது. அதானி, அம்பானிக்கு கோடிக்கணக்கான பணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறார்கள்
அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் தங்கள் தலைவர்களுக்கும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்றார்.
‘யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்…’ நிபுணர்களின் கருத்து என்னென்ன?