தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் போது போலீசாருக்கு காக்கிக்கு பதில் காவி சீருடையாக மாற்றுவோம் என எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
சனாதன ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருப்போம் என அறிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாஜகவினரும் போராட்டம் நடத்தினர். அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறுகையில், “சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால், என்னை கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். அப்போது தமிழ்நாடு போலீசாரின் காக்கி சீருடை மாற்றப்படும். அவர்களுக்கு காக்கிக்கு பதிலாக காவி சீருடை கொடுப்போம்.
சனாதனம் என்பது ஏற்றத்தாழ்வை சொல்லவில்லை. சுபவீ, திருமாவளவன் போன்றோருக்குப் பின்னர்தான் ஆணவக் கொலைகளே நடக்கின்றன. சனாதனத்தை ஒழிப்போம் என்பவர்கள் இனப்படுகொலை செய்வோம் என்கின்றனர். இந்த நிலைமையை மாற்றும் வரை பாஜக ஓய்ந்து போகாது“ என்றார்.