Jaishankar: லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மற்றும் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு நாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் என்ற சர்வதேச விவகாரங்களுக்கான சிந்தனையாளர் அமைப்பின் கூட்டத்தில் ஜெய்சங்கர் பங்கேற்றார். கூட்டம் நடந்த கட்டடத்துக்கு வெளியே, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அதன் கொடியை ஏந்தி கோஷமிட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை கட்டுப்படுத்தினர். கூட்டத்துக்குப் பின், அமைச்சர் ஜெய்சங்கர் தன் காரை நோக்கி சென்றார். அப்போது அவர்கள் கடுமையாக கோஷமிட்டனர்.
இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர், அமைச்சர் காரை நோக்கி பாய்ந்தார். அமைச்சரை தாக்க முயன்ற நபரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது தன் கையில் வைத்திருந்த இந்திய தேசியக்கொடியை அவர் கிழித்தெறிந்தார். அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால், கைது செய்யப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த சம்பவத்துக்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, வெளியுறவு அமைச்சரின் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் துாதரக பொறுப்புகளை பிரிட்டன் அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களில் இருந்து, ஒரு சிறிய பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத கும்பல், வன்முறையை துாண்டும் வகையிலான செயல்களில் ஈடுபட்டுள்ளது உறுதியாகிறது. ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்று துஷ்பிரயோகம் செய்வதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில், பிரிட்டன் அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Readmore: தமிழக மீனவர்கள் 14 பேரைக் கைது செய்து இலங்கை கடற்படை அராஜகம்…!