இந்த போட்டி நிறைந்த உலகில் பலரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது இல்லை. குறிப்பாக நேரத்திற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள தவறி விடுகின்றனர். இதுவே பாதி உடல்நல பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. மேலும் சிலர் எவ்வளவு அவசரமாக சிறுநீர் வந்தாலும் பொது கழிவறைகளில் போகாமல் அடக்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சிறுநீர் கழிக்கின்றனர். இதுபோன்ற செயல்கள் சிறுநீர் கல் உருவாக காரணமாகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கு ஒரு சிறந்த தீர்வு சிறுகண்பீளை. இது எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இதனை பொங்கல் பூ, பாஷாணபேதி, கன்பீளை, சிறுபீளை என்றும் அழைப்பர். இவை அளவில் சிறியவை. இதன் பூக்களும் சிறிதாகவும் வெண்மையாகவும் இருக்கும்.
சிறுகண்பீளை வேரை எடுத்து அதோடு பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை பாலில் கலந்து குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் குணமாகும். சிறுகண்பீளை செடியை முழுமையாக எடுத்து சிறிதளவு சீரகம் சேர்ந்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைக்க வேண்டும். பின்பு இதனை வடிகட்டி காலை, மாலை 2 வேளையும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு குடித்துவரந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும்.