கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
வட சென்னை மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வடசென்னை பகுதி மக்கள் தென் மாவட்டங்களுக்கு சிரமமின்றி செல்ல மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்திலும், 20% பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தாம்பரம், திருவான்மியூரைச் சேர்ந்தவர்களுக்கு கோயம்பேடும், கிளாம்பாக்கமும் ஒரே தூரம்தான்.
கடந்த ஆண்டு பொங்கலைவிட இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் கூடுதலாக 2.40 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. வேலூர், ஆற்காடு, பெங்களூரு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயங்கும்” என்றார்.