விருதுநகர் மாவட்டத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பாண்டியர் கால சிவாலயம் ஒன்று உள்ளது. விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ளது மூவரை வென்றான் எனும் அழகிய கிராமம். இக்கிராமம் மிக நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. இவ்வூரில் இருக்கும் மலையில் தான் இந்த பழமையான சிவன் கோவில் உள்ளது.
குடைவரை கோவில் என்பது கட்டுமானங்கள் ஏதுமின்றி மலையை குடைந்து கட்டப்படுவதாகும். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே காணப்படும். இந்நிலையில் மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற மலைக் கொழுந்தீஸ்வரர் கோவில் மலையை குடைந்து கட்டப்பட்ட ஒரு குடைவரை கோவிலாகும்.
இந்த கோவில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. சமீபத்தில் தான் இங்கு தொல்லியல் துறையினர் வந்து இங்குள்ள கல்வெட்டுகளை படியெடுத்து சென்றதாக இந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். மூலவராக உள்ள சிவலிங்கம் சதுர ஆவுடை வடிவில் இருப்பதை வைத்து இது ஓர் பாண்டியர் கால சிவாலயம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த கோவில் ஓர் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை கோயில். கருவரையினுள் உள்ள சிவலிங்கம் தாய் பாறையினால் செதுக்கப்பட்டு உள்ளது. வெளிப்புறத்தில் விநாயகர், முருகன், நடராஜர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை தவிர வெளியில் மரகதவல்லி தாயார், காலபைரவர் சன்னதிகள் உள்ளன. இந்த மொட்ட மலையின் மேல் பக்கம் ஒரு பகுதியில் முருகன் கோவிலும் மற்றொரு பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றும் கம்பமும் உள்ளது.
கோவிலுக்கு வெளியே மரகதவல்லி அம்பாள், முருகன், விநாயகர், தக்ஷிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மூவரை வென்றான் கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலை மொட்ட மலை என்று கூறினால் தான் அவ்வூர் மக்களுக்கு எளிதில் தெரிகின்றது. மலைக்கு மேல் அழகான சுனை ஒன்றுள்ளது. இந்த சுனை நீரைக் கொண்டு தான் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சுனையில் இருந்து கோவில் கருவறை வரை 500 மீட்டருக்கு பாறைகளை வெட்டி பாதை அமைத்துள்ளனர். இக்கோவிலின் தல விருட்சமாக இலுப்பை மரம் உள்ளது.
இக்கோவிலில் உள்ள மகா மண்டபம் மற்றும் அர்த்தமண்டபம் மட்டுமே கற்களை கொண்டு கட்டப்பட்டது. மற்றபடி கருவறை முழுவதும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. மூலவரான சிவன் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்டு அழகாக காட்சியை தருகிறார். கருவறைக்கு இடது புறம் விநாயகர் சிற்பமும் வலது புறம் ராஜ கோலத்தில் முருகனும், நடமாடும் நடராஜரின் சிற்பங்களும் மிக அழகாக புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.
Read more ; BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை..? மறுத்த அமைச்சர்.. ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை..!!