சேலம் மாவட்டம் செங்கல் அணை ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பாக்கியம். இந்த தம்பதிக்கு செல்வம், ராஜ கணபதி ஆகிய இரண்டு மகன்களும், மாலா என்ற ஒரு மகளும் உள்ளார். செல்வம் – ராஜகணபதி சகோதரர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வந்து வந்துள்ளனர். செல்வத்துக்கு திருமணம் ஸ்ரீதேவி என்கிற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதேபோல், ராஜகணபதி மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகணபதியை பிரிந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார் அவரது மனைவி.
அதன் பின்னர் தாயுடன் வசித்து வந்தார் ராஜகணபதி. இதற்கிடையே, தந்தையின் பெயரில் உள்ள நிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வீடு கட்டியிருக்கிறார். அந்த வீட்டில் முதல் மாடியில் தனது மனைவி மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார் செல்வம். கீழ் தளத்தில் தாயாருடன் ராஜகணபதி வசித்து வந்திருக்கிறார். சமீப காலமாக சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று செல்வத்திடம் தகராறு செய்து வந்திருக்கிறார் ராஜகணபதி. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக செல்வம் – ராஜ கணபதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது செல்வத்தின் மனைவி ஸ்ரீதேவியை தகாத வார்த்தையால் ராஜகணபதி திட்டியிருக்கிறார். உடனே ஸ்ரீதேவி போலீசில் சென்று கொழுந்தன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டார். கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ராஜகணபதியை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். சமாதானமாகி வீட்டிற்கு வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மீண்டும் சொத்து பிரச்சனையால் தகராறு வெடித்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த செல்வம் செங்கல், உருட்டு கட்டையை எடுத்து ராஜ கணபதியின் தலையிலும் முகத்திலும் கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனால், படுகாயம் அடைந்த ராஜ கணபதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ராஜகணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ராஜகணபதியின் மனைவி அளித்த புகாரின் பேரில் கொழுந்தன் செல்வத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.