தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாவட்டத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பானையில், “கோவை மாநகரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் அண்டைய மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் பயணிகள் தனியார் பேருந்துகள் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடும். அதையொட்டி, தனியார் பேருந்துகள் முன்பதிவு மூலமாக பயணச்சீட்டுகள் பதிவு செய்து வழங்குகின்றன.
பயணியர் தாங்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து (ஆம்னி பேருந்து நிலையம்) அவர்கள் ஊருக்கு செல்லும்போது ஏற்கனவே அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மாற்றாக ஏதாவது பேருந்து நிறுவனம் பயணியரிடம் அதிக தொகை கேட்டாலோ அல்லது தரக்கோரி வற்புறுத்தினாலோ சம்மந்தப்பட்ட பயணி உடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு தொலைபேசி எண்ணிற்கு அல்லது கோவை மாநக காவல்துறையின் சமூக வலைதளத்திற்கோ தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார். பயணியின் தகவலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பேருந்து பயணச்சீட்டு முறைகேடு குறித்து தகவல் அளிக்கும் தகவலாளியின் விபரங்கள் முற்றிலும் ரகசியம் பாதுகாக்கப்படும் எனபது தெரிவித்து கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்:
கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை – 100 அல்லது 0422 -2300970. கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் – 8190000100. உதவி ஆணையர் போக்குவரத்து கிழக்கு – 0422 – 2303390 / 9498176064. காவல் ஆய்வாளர் போக்குவரத்து கிழக்கு – 9498176372.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.