கூடங்குளத்தில் உற்பத்தி ஆகவுள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய மின்சாரத்துறைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டின் மின் தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு கூடங்குளத்தின் 3-வது மற்றும் 4-வது அலகில் உற்பத்தியாக உள்ள மின்சாரத்தை முழுமையாக தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கூடங்குளத்தின் முதல் மற்றும் 2-வது அலகில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் 55% தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகிறது. ஆனால், மின் தேவையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 3 மற்றும் 4-வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக தமிழ்நாட்டிற்கே வழங்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசிடம் இருந்து அனுப்பப்பட்ட கடிதம் மத்திய மின்சாரத்துறைக்கு சென்றதும், அவர்கள் தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ள 3 மற்றும் 4-வது அலகுகளில் உள்ள மின்உற்பத்தியும் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பட்சத்தில் இங்கு மின்தேவை பூர்த்தியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.