தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்தாண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதி வீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.
11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் சிகர நிகழ்வான அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்வு அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும். நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு உருவங்களில் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். அதனைத்தொடர்ந்து 11ஆம் நாளான அக்டோபர் 25ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளலும், அபிஷேக ஆராதனையும், அதிகாலை 2 மணிக்கு அம்மன், சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளலும் சாந்தாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடக்கிறது.
இந்நிலையில் இந்த குலசை தசரா திருவிழாவில் வேடம் அணிந்து வரும் பக்தர்களுக்கு காவல் துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காவலர்கள் சார்ந்த சீருடை போன்ற வேடங்கள் அணிய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் சாத்திய சாதிய அடையாளங்களுடன் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.