குமரிக்கண்டம். நாம் இந்த வார்த்தையை வாழ்க்கையில் ஒருமுறையாவது நிச்சயம் கேட்டிருப்போம். இந்தக் கண்டம் இயற்கை பேரழிவு காரணமாக கடலுக்குள் மூழ்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடலுக்கடியில் மூழ்கிப் போன இந்த கண்டத்தில் 20,000 ஆண்டுகால தமிழர் வரலாறு சத்தமின்றி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆம்.. இதுகுறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம்.
இதற்கு முன்பு நீரில் மூழ்கிய அட்லாண்டிஸ் மற்றும் துவாரகாவைப் போலவே, குமரிக் கண்டமும் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தொடங்கி ஆஸ்திரேலியா, அந்தமான், இலங்கை ,மாலத்தீவு போன்ற அனைத்து நாடுகளும் சேர்ந்ததே குமரிக் கண்டம் என்று அறிவியலாளர்களால் அழைக்கப்படுகிறது. இதன் கடல்வழிப்பாதை ஆசியா முதல் ஆப்பிரிக்கா வரை சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆம், இதுதான் நாவலன் தீவு என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த ஒரு கண்டம். இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. இது ஒரு காலத்தில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்..
இந்த நிலப்பகுதி இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே ஒரு மாபெரும் நிலப்பகுதியாக இருந்ததாகக் கருதப்படுகிறது. பண்டைய தமிழர் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான நிலப்பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பாண்டியர்களுடன் நெருங்கிய தொடர்புடையது.
பாண்டிய நாட்டில் கூறப்படும் புராணக் கதைகள் குமரிக்கண்டம் இருந்ததற்கு மேலும் வலு சேர்க்கிறது. குமரிக்கண்டம் பாண்டிய மன்னர்களினால் ஆளப்பட்டது என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் தமிழர்கள் நாகரிகத்தின் தொட்டில் என்றும் இது அழைக்கப்படுகிறது.
குமரிக்கண்டத்தில்தான் முதன்முதலில் மனிதர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நம் மூதாதையர் வாழ்ந்ததும், நம் தாய்த் தமிழ் பிறந்ததும் இங்கே தான். இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம்.
ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் 49 நாடுகள் இருந்துள்ளன. பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன. தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான 3 நகரங்கள் இருந்தன.
மேலும் குமரிக்கண்டதை ஆண்ட பாண்டிய மன்னர்கள் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் இயற்கை பேரழிவுகள் காரணமாக குமரிக் கண்டம் இந்திய பெருங்கடலில் மூழ்கிப் போனது என்றும் கூறுகின்றனர். சுமார் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இப்போது இருப்பதை விட 100 மீட்டர் குறைவாக இருந்தது என்று இந்தியாவின் தேசிய கடல்சார் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. மேலும் கடல் மட்டத்தின் உயர்வும், குமரிக்கண்டம் கடலில் மூழ்கியதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
பேரழிவுகளுக்கு பின் அங்கு வாழ்ந்த மனிதர்கள் மூன்று திசைகளிலும் பிரிந்து உலகம் முழுக்க சென்றிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கின்றன. இதற்கு, தெற்கு-ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் உடல் கூற்றுகள் மற்றும் எலும்பு கூடு அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் 1960 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சியில் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் குமரிக்கண்டம் இருந்தது என்பதை உறுதியாக கூற முடியவில்லை.
எனவே குமரிக் கண்டம் என்பதே வெறும் கற்பனை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மேலும் குமரிக்கண்டம் குறித்த ஆராய்ச்சிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை முழுமையாக ஆய்வு செய்தால் குமரிக்கண்டம் குறித்தும், தமிழரின் வரலாறு குறித்தும் பல பிரம்மிப்பூட்டும் தகவல்கள் வெளியாகலாம்..