ரஷ்யாவில் கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்து பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சத்திற்கும் அதிகமான ரஷ்யர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்ய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளா். இது தொடர்பாக அவர் கூறியதாவது; “நம்முடைய பல இனத்தினர் 4, 5 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களை கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.
நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் 7, 8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றனர். இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம். ரஷ்யாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார்.