மாணவி குளிப்பதை ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்2 மானவி. இவர், தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலையில் நடைபயிற்சி சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கிராமத்திற்கு அருகே உள்ள கால்வாயில் மாணவி சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாணவி கால்வாயில் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்த நிலையில், மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த சிவம் என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், வீட்டின் மேற்கூரையில் ரகசிய கேமரா வைத்து மாணவி குளிப்பதை சிவம் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இந்த விவகாரம் மாணவிக்கு தெரிய வரவே அவமானம் தாங்க முடியாமல் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக சிவத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.