இன்றைய நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே கையால் செதுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றான சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நியூ ஜெர்சியில் இன்று திறக்கப்பட உள்ளது.
நியூஜெர்சியில் ராபின்ஸ்வில்லே என்ற இடத்தில் அமெரிக்காவில் இருந்து 12,500 தன்னார்வலர்களால் 12 ஆண்டுகளாக அதாவது 2011 முதல் 2023 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டு வந்துள்ளது. கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கோர் வாட் கோவிலுக்குப் பின்னர் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கோவிலாக அக்ஷர்தாம் கோவில் கருதப்படுகிறது. சுமார் 183 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ள இந்த கோவில் பண்டைய இந்து வேதங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அழகிய கலை வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த கோவிலில் கல்வி மற்றும் ஞானத்தின் தெய்வமாக விளங்கும் சரஸ்வதி தேவி வீணை வாசிப்பது போல் சிலை செதுக்கப்பட்டுள்ளது. 10,000 சிலைகள், இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களின் செதுக்கல்கள் உட்பட பண்டைய இந்திய கலாச்சாரத்தின் வடிவமைப்பு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. 12 துணைக் கோவில்கள், ஒன்பது கோபுரம் போன்ற கட்டமைப்புகள் மற்றும் ஒன்பது பிரமிடுகளை கொண்டுள்ளது. அக்ஷர்தாமில் இதுவரை கட்டப்பட்ட பாரம்பரிய கல் கட்டிடக்கலையின் மிகப்பெரிய நீள்வட்ட குவிமாடம் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி பளிங்கு கற்களாலும், பல்கேரிய சுண்ணாம்பு கற்களாலும் இந்திய கைவினை கலைஞர்களால் செதுக்கப்பட்டு அனுப்பப்பட்டது. கட்டுமானத்தில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் கன அடி கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலை வேளையில் ரம்மியமான தோற்றத்தில் காட்சியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அக்ஷர்தாமில், ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு சிறப்பு உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு வகையான கற்களில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்கு மற்றும் கிரானைட் ஆகியவை அடங்கும். அவை கடுமையான வெப்பத்தையும் குளிரையும் தாங்கும்.
இந்தக் கோவிலில் பாரம்பரிய இந்திய படிக்கட்டுக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நதிகள் மற்றும் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்ட நீர்நிலைகளிலிருந்து நீரை இந்தக் கிணறு கொண்டுள்ளது. இத்தனை அம்சங்களை கொண்டுள்ள தனித்துவமான இந்துக் கோவில், இன்று திறக்கப்படவுள்ளது. அக்டோபர் 18ம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட இருக்கிறது.