2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் சியோமி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய நிலையில், தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை 1000த்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 30 பேரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. மேலும் இனி வரும் காலத்திலும் அதிகப்படியானோர்-க்கு பிங்க் ஸ்லிப் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொடிக்கட்டி பறந்து வந்த சியோமி கடந்த 2 வருடத்தில் வர்த்தக இழப்பு, மத்திய அரசு அமைப்புகளிடம் இருந்த வந்த கட்டுப்பாடுகள் என அனைத்தும் சேர்ந்து நிர்வாக மறுசீரமைப்பின் கீழ் 6 மாதத்தில் 500க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சீன தாய் நிறுவனத்தின் உத்தரவுகளை பின்பற்றுகிறது. இதன் மூலம் சியோமி இந்தியாவில் இந்திய ஊழியர்களுக்கான அதிகாரம் மிகவும் குறைவு என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்ய முடிகிறது. இதுகுறித்து சியோமி நிர்வாகம் கூறுகையில், இந்தியாவில் பணிநீக்கம் வர்த்தக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வர்த்தக கணிப்புகள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சியோமியின் மொத்த மொபைல் விநியோகம் 50 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதேவேளையில் 70 – 80 மில்லியனாக இருந்தது. இதேபோல் சியோமி தனது முதல் இடத்தை சாம்சாங் நிறுவனத்திடம் இழந்துள்ளது.