கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை 4 பேருடன் சேர்ந்து கொடூரமாக கொன்ற மனைவி போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கோண்டலே பந்தன் பாடா என்ற கிராமத்தில் கடந்த 20ஆம் தேதி அன்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில் அந்த நபர், கழுத்தை நெரித்து தலையில் கடுமையாக தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. பிறகு இதை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட நபர் யார் என்ற தகவலை திரட்டி, அவரது மனைவியிடம் விசாரித்தனர். இந்த வழக்கில் மேலும் சிலர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை மனைவி பலமுறை கண்டித்தும் அவர் கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் 4 பேரின் உதவியுடன் கணவனை, மனைவியே கழுத்தை நெரித்தும் தலையில் கடுமையாக தாக்கியும் கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய இறந்தவரின் மனைவி உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.