சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நேற்று (9.04.2025) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”நுழைவுத் தேர்வு என்பது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்பதால், பள்ளிக்கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும்.
ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது. இதற்கு எதிராக திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்ட போராட்டத்தை தொடங்கினோம். நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறதா..? என்பதை கண்டறிய குழு அமைத்தோம். அந்த குழு பரிந்துரைப்படி, அரசு செயலாளர்களை கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றத்தில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார். பின்னர், மீண்டும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பினோம். ஆளுநரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். தொடர் முயற்சிகளை அடுத்து, ஆளுநர் சட்ட மசோதாவை கடந்த 2022 மே 4-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், மத்திய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற முயற்சித்தோம். ஆனால், அவர்கள் நீட் விலக்கு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டனர். இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. நமது சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Read More : அங்கன்வாடி மையங்களில் 7780 + காலியிடங்கள்..!! மாதம் ரூ.24,200 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!