”இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”இந்த கூட்டத்தின் நோக்கம் வரும் 4ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பின்பு அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். தமிழ்நாட்டில் திருச்சியில் தான் அனைத்து இடங்களையும் திமுக வென்றுள்ளது. சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி பெரிதாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இங்கே இருக்கும் எதிர்க்கட்சி அதிமுக இன்றைக்கு பிளவுபட்டுள்ளது. ஆகையால் அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது. நான் வெளிப்படையாக சொல்கிறேன். வெட்கத்தை விட்டு சொல்கிறேன். இன்றைக்கு
இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள். தற்போது திமுக எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்”. இவ்வாறு அவர் பேசினார்.